மார்கழி மாதத்து மழை ...


அது ஒரு அருமையான மார்கழி இரவு, சில்லென்று உடல் கீறும் காற்றும், நாசிகளை துளைத்துசெல்லும் பவழமல்லி பூவின் வாசமும், கிள்ளிஎரிந்த முழு நகத்தை போன்ற பிறை நிலாவும், மென்மையாக இதயம் வருடும் இளையராஜாவின் "நிலவு தூங்கும் நேரம், நினைவு தூங்கிடாது" பாடலும் என்னை கவந்து இழுத்துவிட்ட பொழுது அது. அந்த சுகத்திலும் என்னுள்ளிருந்த கண்ணீரை கறந்து இழுத்தது சுமதியின் முகம். விழிகளில் கசிந்த அந்த கண்ணீர்த்துளி, மெல்ல என் காதுகளின் இடுக்கில் வழிந்து, அந்த குளிர் காற்றுடன் சேர்ந்து உறைந்து போனது. நான் கேட்காமல் எனக்கு அனைத்தையும் அளித்த இறைவன், நான் விரும்பிக்கேட்ட என் சுமதியை மட்டும் எனக்கு தர மறுத்ததின் காரணத்தை தேடி அலைந்தது என் மனது...

உலகத்தில் உள்ள அனைத்து பெண்களை காட்டிலும் அழகு என் சுமதி, குட்டையான உயரமே இருந்தாலும், அவளின் கண்களில் தெரியும் அந்த ஒளியும், சிரிக்கும் போது இடக்கன்னத்தில் தோன்றும் அந்த குழியும், காற்றில் அலைபாயும் அந்த கூந்தலை அவள் இரு விரல்களால் காதுகளின் இடுக்கில் சொருகும் அந்த தோரணையும், தூரத்தில் நின்றிருந்தாலும், மெலிதாக உதிர்க்கும் அந்த குறுநகையும், என்னை கட்டித்தான் போட்டது. நான் பிறந்த பயனை எனக்கு உணர்த்தவே இறைவன் எனக்கு அவளை பரிசாக அனுப்பியதாக எண்ணியிருந்த நாட்கள் பல உண்டு. அனைவரிடமும் சிரித்து பேசும் கள்ளம் இல்லாத குணம் அவளுடையது, எதையும் எடுத்த எடுப்பில் நம்பிவிடும் குழந்தை அவள்.

எங்கள் ஊருக்கும், சுமதியின் ஊருக்கும் ஜென்ம பகை, ஆகவே அவளை முதன் முதலில் சந்தித்த அனுபவமே சிலிர்க்கும் ஒரு திரைக்காவியம் போன்றது. அந்த ஊரின் மருத்துவரின் ஒரே மகள் தான் சுமதி, வயல்களில் களை அறுக்கும் காலங்களில் மட்டும் தான் வெளியே வரும் அந்த பஞ்சவர்ண கிளி. ஒரு சமயம், அந்த மயிலின் உடல் நலத்தில் ஒரு சிறு பாதிப்பு, ஊருக்கு வைத்தியம் சொல்லும் தகப்பனால் சரி செய்ய முடியாத ஒரு தருணம். எங்கள் ஊரில் தான் பெரிய ஆஸ்பத்திரி உள்ளது, என்ன தான் பகை என்றாலும், நாங்கள் பெருந்தன்மையோடு அவர்களை எங்கள் மருத்துவமனையை பயன் படுத்த அனுமதித்தோம். அப்படி ஒரு சமயத்தில், வேறு ஒரு நோயாளிக்கு ரத்தம் கொடுக்க சென்ற நான், இந்த பைங்கிளிக்கு என் இதயத்தையே கொடுத்துவிட்டு வந்தேன்.

எங்கள் ஊர் மக்கள் நிற்பதற்கு ஒரு வரிசையும், அவர்கள் ஊர் மக்கள் நிற்பதற்கு ஒரு வரிசையும் இருப்பது தான் அந்த மருத்துவமனையில் வழக்கம், இதில் எந்த மாற்றமும் இருந்ததில்லை என்று என் தாத்தா சொல்லி அறிவேன், அதே பழக்கம் என் காலத்திலும் தொடர்கிறது. அப்படி அன்று நானும் சுமதியும் இரு வரிசையில் ஒரே இடத்தில் நின்றிருந்த பொழுது, கண்கள் வழியே எங்கள் இதயங்கள் பரிமாரிக்கொண்டட்தை எவரும் கண்டிருக்க இயலாது. காதல் வந்த பின், இமய மலையிம் சிறு துரும்பு போலத்தானே தெரியும், அப்படி ஒரு துணிவில், என்னவளின் கரம் பிடிக்க ஆசைப்பட்டது என் மனது, இரு கிராமங்களுக்கும் இடையே நடக்கும் பனிப்போர் அறிந்தும் நான் அந்த செலையை செய்ய துணிந்தது, சற்றே ஆபத்தான காரியம் தான். யாரும் பார்த்திராத அந்த தருணத்தில் என்னவளின் கை விரல்களை தீண்டியது என் கரம், அதன் பின் என் முதுகின் நடுத்தண்டில் நெருடிய அந்த கூறிய அரிவாளின் உறுத்தலால் சட்டென்று விலக்கிக்கொண்டேன், அதன் பின்னர் பஞ்சாயத்தில் மீசையை எடுத்து ஊர் அறிந்த ரகசியம்.

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் ஊர் அறிய என் காதலை நான் சுமதியிடம் கூறிய பொழுது, நான் அவள் மேல் வைத்திருக்கும் காதலின் ஆழத்தை உணர்ந்தாள் சுமதி, இரு கிராமங்களின் பஞ்சாயத்திலும் எண்களின் காதல் வழக்கு தான் ஓடிக்கொண்டிருந்தது. அடித்து பார்த்தார்கள், எச்சரித்து பார்த்தார்கள், எரித்து பார்த்தார்கள், கிழித்து பார்த்தார்கள், தளரவில்லை நான். சுமதிக்கும் இதே நிலைமை தான், வெளியில் தலைகாட்ட கூட அனுமதி இல்லை, கூரைகளின் ஓட்டிகளுக்கு நடுவில் விரல் தொடும் வெளிச்சத்திலும் வாழ்கையின் ஒளி தேடியவள் சுமதி, கல் நெஞ்சகாரி, போராளி, இவை அனைத்திற்கும் மேல் அவள் ஒரு பாசக்காரி, ஊரார் தூற்றினாலும், செவி கூச ஏசினாலும், நெஞ்சில் உறம் வைத்து, காதலை வளர்த்தவள், எப்படியும் என் கரம் பற்றிவிட முடியும் என்று தீர்கமாக நம்பியவள்.

வாரங்கள் மாதங்களாயின, மாதங்கள் வருடங்களாயின, எண்களின் காதலும் வலுவானது. எண்களின் உணர்வுகளை மதித்த ஒரு ஜீவனிடம், சுமதியை ஊர் கோடியில் உள்ள அய்யனார் கோவிலுக்கு வருமாறு தூது அனுப்பினேன், சுமதியும் பலர் கண்களில் மண்ணை தூவி என்னை பார்க்க வந்தாள், வார்த்தைகளட்ட்ற அந்த மௌனத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை, கண்களில் நீர் பெருக்கெடுத்து இருவருக்கும், "அய்யனார் முன்னாடி என்ன இது சின்ன பிள்ள தனமா அழுதுகிட்டு, என் ராசா அந்த அய்யனாருக்கே காவல் நிப்பாரே, அவரே அழுதா, ஐய்யனாரு சிரிக்க மாட்டாரா" என்று என்னுள் வீரத்தை ஊட்டியவள் சுமதி. மடி மீது மடி சாய்த்து, எங்களையே மறந்து இருந்த நிலையில், எங்கள் ஊரின் நுழிவாயிலில் கேட்டது அந்த மரண ஓலம், பற்றி எரிந்தது எனது மக்களின் குடில்கள். எங்கள் இருவரின் இணக்கத்தை கண்ட துரோகி ஒருவன் செய்த ஈன செயல் அது.

கண்களில் வடிந்த நீரை துடைத்தவாறு சொன்னாள் சுமதி "மாமா, வாழ்ந்தா ஒன்ன வாழுவோம், செத்த ஒன்ன சாவோம், நமக்காக எந்த உசுரும் சாக வேண்டாம், இப்பவே இந்த ஊற விட்டு ஓடி போய்டலாம்" அனைத்திற்கும் துணிந்தவாறு இருவரும் ஊர் எல்லையை நோக்கி ஓட துவங்கினோம், இரு பக்கத்திலிருந்தும் பெருக்கெடுத்து மனித அலைகள், நாளை என்ற நாளே இல்லாதது போல் ஓடினோம், வெறி கொண்டு துரத்தியது மதி இழந்த மனித மிருகங்கள், என் கையை விட்டு பிரிந்து ஓடிய சுமதி, ஒரு கணம் வீரிட்டு அழுதபடி என்னை வந்து அணைத்துக்கொண்டாள், அவள் ரவிக்கையின் நிறத்தை சிவப்பாக மாற்றியது அவள் முதுகெலும்பில் சொருகி நின்றிருந்த அரிவாள் ஒன்று, அதை பிடுங்கி எறியக்கூட சக்தி இல்லாதவனாய், வாய் விட்டு அலறி அழுத படி நான். இந்த ரணம் அனைத்தும் காட்சியாக ஓடிக்கொண்டிருந்த அந்த ஒரு மார்கழி இரவில், என் கண்ணீருடன் கலந்தது அந்த மார்கழி மாதத்து அதிசய மழை, அவை இரண்டையும் துடைக்கக்கூட இயலாதவனாய், வெறித்து பார்த்தேன், கை இழந்த என் உடலை.

Comments

  1. Very beautifully written...gud one

    ReplyDelete
  2. Bharathirajavukku pakathu veetukarar??

    anniyayama ponnu pottu thaliteengale..

    Nice one dude.. started as a pleasant feeling with everythin connected to rain and ended with a heavy heart... :-)

    ReplyDelete
  3. Well written..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

My Songs Collection ...

கல்யாணமோ கல்யாணம் ...

Madras Tamil in IT Industry