இப்படிக்கு ... காலம் ...


வாழ்க்கையில் நாம் நிகழ்காலத்தை ஏனோ ஏற்க மறுக்கிறோம், அது கடந்தகாலம் ஆகும் வரை. மனித மனத்தில் தான் எத்தனை எத்தனை மாற்றங்கள், வாழ்கையின் அந்த ஒரு நொடியை, அந்த ஒரு நிமிடத்தை, அந்த ஒரு தருணத்தை, அந்த ஒரு நாளை தொலைத்து அழுதவர் தாம் இவ்வுலகில் அதிகம். பள்ளிக்கூடம் சென்ற நாட்களில், பள்ளிக்கூடத்தை வெறுத்தோம், கல்லூரி சென்ற நாட்களில், கல்லூரியை வெறுத்தோம், வேலைக்கு சென்ற நாட்களில் அலுவலகத்தை வெறுத்தோம், முதுமை எனும் அரவம் தீண்டியபின், நாம் வெறுத்த அந்த நாட்களை, உள்ளத்தில் களிப்போடு அசைபோட்டு பெருமைப்பட்டுக்கொள்கிறோம் ... இப்படிப்பட்ட ஒரு முரண்பாட்டை ஏன் நம்முள் வைத்தார் இறைவன் ?

அறுபதில் பாதியை கடந்த எனக்கு, பொறாமை எனும் குணம் இன்று என்னுள் தலை விரித்து ஆடிக்கொண்டிருக்கிறது, காலை எழுந்தவுடன் என் காலைக்கடன்களை முடித்தபின் நான் தங்கியிருக்கும் குடியிருப்பில் நடை பயிற்சி செய்வது என் வழக்கம், அப்படி செல்கையில் ஒரு நாள் ஒரு மழலையை சந்தித்தேன், கோடை விடுமுறையை முழுவதுமாக அனுபவித்துவிடவேண்டும் என்ற வெறி அவன் கண்களில் தெரிந்தது, பெரிதும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாத ஒரு பருவம் அது, அவன் கையில் இருந்த பந்து தான் அவனது உலகம், அவன் தான் உலகமென்று அவன் பின்னால் துள்ளி திரிந்தது அவன் வளர்க்கும் ஓர் நாய்க்குட்டி. என் அருகே அவன் அடித்த அந்த பந்து வந்த பின், என்னையும் அறியாமல் வேகமாய் எட்டி உதைத்தேன் ஒரு இளைஞனின் துடிப்போடு, அப்படி உதைத்ததில் தசைகளில் நான்கு பிசகிக்கொண்டதை நான் இங்கு சொல்ல விரும்பவில்லை. அவனோடு சேர்ந்து ஒரு 15 நிமிடங்கள் விளையாடியதில் நானும் குழந்தையாய் போனேன். வாங்க அங்கிள், இன்னும் கொஞ்ச நேரம் விளையாடலாம் என்று அவன் என்னை கேட்டதில், அந்த "அங்கிள்" என்ற சொல், நான் என் பால்யத்தை கடந்து விட்டேன் என்று மீண்டும் ஒரு முறை ஊர்ஜினப்படுத்தியது. நானும் இவன் போன்ற வயதில் இருந்த ஒரு காலத்தில் என்னையும் பூங்காவிற்கு அழைத்து சென்று விளையாட வைத்தார்கள், ஆனால் அன்றோ, டாம் அண்ட் ஜெர்ரியில் இருந்த மோகம் எனக்கு விளையாட்டின் மேல் இல்லை ... அந்த வயதில் அதை அனுபவிக்க எனக்கு தெரியவில்லை ... அந்த சிறுவன் மேல் பொங்கி அடங்கியது என் பொறாமை தீ.

பள்ளிப்பருவம் தான், நாம் நாமாக இருந்திருக்கக்கூடிய கடைசி பருவம், அதுவும் என் போன்ற வடி கட்டிய முட்டாளுக்கு அந்த பருவமும் சுமையாகத்தான் இருந்தது. ஆனால் அதில் பல சுவாரஸ்யங்களும் நிறைந்திருந்தது. பணம் என்ற அரக்கன் நம்முள் நுழையாத காலம் அது. பள்ளிகூட வாசலில் "குச்சி ஐஸ்" விட்ற அந்த முதியவரின் முகம் இன்றும் என் நினைவில் தெளிவாக இருக்கிறது, அவர் அதை ஒரு வியாபாரமாக ஒரு நாளும் செய்ததாக எனக்கு கவனம் இல்லை - "டேய் உனக்கு மூணு நாளா இருமல் ஜாஸ்தியா இருக்கு, உனக்கு நா இன்னிக்கு ஐஸ் குடுக்க மாட்டேன்" ஒரு வியாபாரியிடம் இருந்து இந்த பரிவை நீங்கள் எதிர்பார்க்க முடியாது. அவரிடம் நான் வைத்த கணக்கை இன்று வரை தீர்க்கவில்லை, இப்பொழுது வருந்துகிறேன் நான், அந்த 6 ரூபாய் 25 பைசாவை கொடுக்காமல் போனதற்கு. இன்று வங்கியில் லட்ச லட்சமாக பணம் வைத்திருந்தாலும், பாஸ்கின் அண்ட் ராபின்ஸ், கார்னர் ஹவுஸ், மில்கி வே போன்ற இடங்களில் ஐஸ் கிரீம் வாங்குவதருக்கு பொருளாதாரம் இடம் கொடுத்தாலும், அந்த முதியவர் கொடுக்கும் குச்சி ஐஸில் இருக்கும் சுவை வேறு எதிலும் இல்லை என்றே சொல்ல தோன்றுகிறது. பெட்டிகடைகளில் விற்கும் ஸ்ட்ராங் மிட்டாய்களை சிறிது நேரம் சுவைத்து விட்டு, உடனே நீர் பருகும் போது, நம்முள் ஒரு குளிர்ச்சி உண்டாகும் அல்லவா, அந்த உணர்வை தான் நம் பள்ளிப்பருவம் நமக்களிதிருக்கிறது. பள்ளிக்கூடங்களை கடக்கும்போதெல்லாம் அந்த குழந்தைகளின் மேல் எனக்கு பொறாமை வருவதென்னவோ உண்மை தான் ...

கல்லூரி பருவம் தான் எந்த ஒரு மனிதனின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் பருவம், இது அவர்கள் என்ன துறையை எடுத்து படிக்கிறார்கள் என்ற அர்த்தத்தில் அல்ல, அந்த வயதில் தான் ஒரு மனிதன் இந்த சமுதாயத்தில் செதுக்க படுகிறான், இல்லை இல்லை, அந்த பருவத்தில் தான் சமுதாயம் ஒரு மனிதனை செதுக்குகிறது. அன்பு, வீரம், காதல், நட்பு, பாசம், விடா முயற்சி, வெறி, வெற்றி, தோல்வி, சிரிப்பு, அழுகை இவையெல்லாம் ஒரு கலவையாக நம்முள் உருவெடுக்கும் பருவம் அது. நண்பர்களின் நடுவே, ஜாதி, மதம், இனம், மொழி, நிற வேறுபாடுகள் மறந்து ஒருவர் தோள் மீது ஒருவர் கைபோட்டு நடந்த காலம் அது. கூட்டி கழித்து பார்த்தல் பத்து ரூபாய் கூட இருக்காத காலங்களில், ஒரு பேக்கரி கடையில் மூன்று எக் பப்பை 12 துண்டுகளாக பிரித்து சாப்பிட்ட அனுபவம் இன்றும் சிலிர்பை ஏற்படுத்துகிறது, அது தான் பகிர்ந்து உண்ணும் பழக்கத்தை நம்முள் ஏற்படுத்திய முதல் அனுபவம், வயிறு நிரம்பாவிட்டாலும், மனது இரம்பியிருக்கும். அன்று பிசிக்ஸ் வாத்தியாரும், கெமிஸ்ட்ரி வாத்தியாரும் பேசுவது உளறலாக தெரிந்தது, ஆனால் இன்றோ ப்ராஜெக்ட் மேனேஜர் என்கிற பெயரில், ஒரு லூசு என் உயிரை வாங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல வேலை அதுக்கு தமிழ் படிக்க தெரியாது, படிக்க தெரிந்தால் என் "அப்பரைசல்" "ஆப்பு"ரைசல் ஆகிவிடும். கல்லூரி பருவத்தில் வேபங்கையாக இருந்த நாட்கள் இன்று இனிக்கத்தான் செய்கிறது ...

அவனியில் அவளன்றி யாரும் இல்லை என்று திரிந்த காலங்களில், என்னுள்ளும் வந்து போனார்கள் ரஜினிகாந்தும் ... கமலகாசனும் ... சென்ற வாரம் என் மனைவி அவள் சமைக்கும் மேடையில் ஒரு பல்லி இருப்பதாக கூறி, அதை விரட்ட என்ன அழைத்த பொழுது, ஒரு நாற்காலியின் மேலிருந்து ஒரு ஆறடி நீளமுள்ள கம்பை வைத்துக்கொண்டு "ஷூ ஷூ" என்று ஈனசுவரத்தில் நான் கத்திய பொழுது, அவர்கள் எங்கு போனார்கள் என்று தான் தெரியவில்லை. காதலிக்கும் பொழுது அவளுக்காக காத்திருக்கையில், அந்த தருணங்களை வெறுத்த என் மனம், அவள் வந்ததும் அவளிடம் மனம் விட்டு பேச மறுத்தது, இதோ, இன்று யாரோ அறிமுகம் இல்லாத ஒருத்தியை மனந்த பின், அவள் தாமதமாக வந்தாலும் சகித்துக்கொள்ள கற்றுக்கொண்டது இந்த மனம். அன்றும் நான் என் நிகழ்காலத்தை ரசிக்கவில்லை. இப்படி ஒவ்வொரு தருணத்திலும், சந்தோஷத்தை தொலைத்து விட்டு, அந்த காலங்கள் மீண்டும் வராதா என்று ஏங்குகிறது மனம்.

வெறும் அவல் பொறியும், அரிசி பொறியும் மட்டுமே அறிந்திருந்த நான், இந்த பாழாய் போன கணிப்பொறியை சாப்பிட வேண்டும் என்று ஏங்கிய நாட்கள் தான் எத்தனை எத்தனை. விவரம் அறிந்த வயதில், அது உண்ணும் ஒரு பொருளல்ல என்று தெரிந்தபின், அதை எண்ணி நான் கண் கலங்கியது, கொஞ்சம் டூ முச்சாகத்தான் தெரிகிறது ... இதோ காலத்தின் கோலத்தில் நானும் ஒரு ARCHITECT என்ற பெயரில், ஒரு கணினி நிறுவனத்தில் குப்பை கொட்டிக்கொண்டு தான் இருக்கிறேன். இன்று அலுவலகத்தில் இரவு பகலாக அந்நியர்களின் தேவையை பூர்த்தி செய்வதற்காக, என் உடல் வருத்தி வேலை செய்யும் பொழுது, மனம் என் கடந்த காலத்தை நோக்கித்தான் செல்கிறது. இதோ இந்த நிகழ்காலத்தையும் நான் அனுபவிக்காமல் புலம்பிக்கொண்டு தான் இருக்கிறேன். நாளை நான் உடல் தளர்ந்து, உள்ளம் தளர்ந்து, ஒரு மர நாற்காலியில் சாய்ந்திருக்கும் வேளையில், இதோ இன்று கசக்கும் இந்த அலுவலக வேலைகளை எண்ணி பூரிக்கும் நாட்கள் வரத்தான் போகிறது.

வாழ்க்கையில் தவற விட்ட தருணங்களை மீண்டும் பெற முடியும் என்றால், நம்மில் பலர் இன்று தொட்டிலில் மட்டுமே தவழ்வதற்கு ஆசை பட்டுக்கொண்டிருப்போம். நம் எல்லோர் உள்ளும் ஒரு குழந்தை இன்னும் ஒளிந்து கொண்டுத்தான் இருக்கிறது, அதை கொஞ்சம் எழுப்பிவிட்டுத்தான் பாருங்களேன், வாழ்கை இனிக்க தொடங்கலாம். குழந்தைகள் மட்டும் தான் நிகழ்காலத்தை ரசித்து அனுபவித்து வாழ்கின்றனர், மீண்டும் நம்மால் அதை முழுமையாக அனுபவிக்க முடியாவிட்டாலும் ... முயற்சி செய்து தான் பார்ப்போமே ... "அப்பா ... நேக்கு பிச்சு (biscuit) வாங்கித்தரிய ? நா இனிமே சூ சூ பெட் ல போமாட்டேன் பா ..." தயவு கூர்ந்து செருப்பை கீழே போடவும் ... நான் இப்பொழுது தான் என்னுள் இருந்த குழந்தையை எழுப்பினேன் ... :-)

இப்படிக்கு ... காலம் ...

Comments

 1. "ஆனால் இன்றோ ப்ராஜெக்ட் மேனேஜர் என்கிற பெயரில், ஒரு லூசு என் உயிரை வாங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல வேலை அதுக்கு தமிழ் படிக்க தெரியாது"

  He he.... parthu..tamil therinchu erukka poguthu!!!

  Athu ennamo appadi thaan..nigal kalam namma ella expectations yum fulfill pannathathala namma polambitte thaan erukkom....but still "live the moment"

  ReplyDelete
 2. அந்த "அங்கிள்" என்ற சொல், நான் என் பால்யத்தை கடந்து விட்டேன் என்று மீண்டும் ஒரு முறை ஊர்ஜினப்படுத்தியது --- Venaaaam Valikudhu.....Azudhuruvaen....

  Nice post mate!

  ReplyDelete
 3. Had fun reading inspite of the facts. Of late, i started realising that everything happens only for the good.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

My Songs Collection ...

கல்யாணமோ கல்யாணம் ...

Kadalai Podaradhu Eppadi ??