மெகா சீரியல்

வாய் நிறைய சிரிப்போடும், முகம் நிறைய பொட்டோடும், சீவி பின்னிய சடையோடும் அலுவலகம் முடிந்து அலுப்பாக வரும் கணவனை மனைவி மார்கள் வரவேற்ற காலமெல்லாம் இதிகாசங்களிலும், புராணங்களிலும் தான் இனி பார்க்க முடியும். இபொழுது இருக்கும் நிலைமையே வேறு, அழுத கண்களோடும், சிந்தி சிந்தி சிவந்த மூக்கோடும், வீங்கிய முகத்தோடும் தான் இக்கால மனைவிமார்கள் கணவனை வரவேர்க்கின்றனர்...

ஒரு முறை இப்படித்தான் ஒரு மாலை வேளையில், நானும் அலுவலகம் முடித்து களைப்புடன் வீடு திரும்பியபோது, விக்கி விக்கி அழுதுகொண்டே என் தோள்களில் சாய்ந்த என் மனைவியை பார்த்து பதறிப்போனேன், "என்னடா செல்லம் ஆச்சு உனக்கு, மாமன் நா இருக்கேன், என் கிட்ட சொல்லுடா உன் கஷ்டத்த" என்று ஆறுதல் கூரும்வண்ணம் வினவினேன், "கமலா சித்தி ஆக்சிடென்ட் ல செத்து போய்டாங்க" என்று கூறி, மேலும் எதுவும் பேச இயலாதவளாக அந்த ஒழுகும் பிசிபிசுப்பு மூக்கு சளியை என் புது சட்டையில் தேயத்தவளாய், அதன் மீதே முகம் புதைத்து அழுகையை தொடர்ந்தாள்.

அவள் குடும்பத்து நபர்களை நான் மனதில் கொள்வதில்லை என்ற எண்ணம் அவளுக்கு எப்பொழுதும் உண்டு, அதை போலவே எனக்கு அவள் குடும்பத்தில் கமலா என்று யாரையும் தெரிந்தது போல் நினைவில் தோன்றவில்லை, மிகவும் முயற்சி செய்து பார்த்தும் பலனின்றி, அவளிடமே மெல்ல வினவினேன், "யாரு அந்த எட்டு கல் பேசரி வைர தோடு போட்டுக்கிட்டு, நெத்தி முழுசா போட்டு வெச்சுகிட்டு, ஒரு மணி நேரத்துக்கு ஒரு பட்டு புடவை மாத்தி மாத்தி கட்டிகிட்டான்களே அந்த சித்தி யா" என்று வினவிய என்னை, சற்றே புரியாதவளாய் பார்த்துவிட்டு, "அட என்னங்க, "பத்தினி" சீரியல் ல பவாநியோட சித்தி தான் கமலா" என்று கூறிவிட்டு, விளம்பர இடைவேளை முடிந்த குஷியில் மீண்டும் அந்த பாழாய்ப்போன டி வீ முன் விக்கி விக்கி அழ தொடங்கினாள்.

இந்த கொடுமையை கூட தாங்கிக்கொள்ளலாம், இப்பொழுது இருக்கும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் அழகை பார்த்து அதிர்ந்தே போனேன் நான். ஒரு முறை என் குழந்தையை பள்ளிக்கூடத்திலிருந்து அழைத்து வருகையில், ஒரு தாய் தன் குழந்தைக்கு இப்படித்தான் பாடம் சொல்லி சொல்லிக்கொடுக்கிறாள், A பார் - "அரசி", B பார் "பந்தம்", C பார் "சித்தி", D பார் "தர்மம்", E பார் "எங்கிருந்தோ வந்தாள்", K பார் "கோலங்கள்", M பார் "மெட்டி ஒலி", "என்ன கொடுமை சரவணன் இது" என்று முணுமுணுத்த படியே எனது சைக்கிளை வேகமாக மிதிக்க துவங்கினேன்.

முன்பெல்லாம் குழந்தைகள் வீட்டு பாடங்களை விரைவாக முடித்துவிட்டு விளையாட செல்வதற்கு ஆர்வமாக இருப்பார்கள், இப்பொழுதும், அதே விறுவிறுப்புடன் தான் வீட்டு பாடங்களை முடித்து விடுகிறார்கள், ஆனால் விளையாட போவதற்காக அல்ல, மெகா சீரியல் பார்பதற்காக. பாரதி மட்டும் இப்பொழுது உயிருடன் இருந்திருந்தால் "ஓடி விளையாடு பாப்பா" என்ற பாட்டு இப்படித்தான் இருந்திருக்கக்கூடும்.

"ஓடி வா இங்கே பாப்பா, உனக்கு புடிச்ச சீரியல் ஆரம்பிச்சாச்சு வாப்பா, விளம்பர இடைவேளைக்குள் சாபிட்டுவிடு பாப்பா, "அண்ணாமலை சீரியல் போகுது ரொம்ப டாப்பா, ஓடி வா இங்கே பாப்பா..."

இந்த பாழாய்ப்போன மெகா சீரியல்களால் எத்தனை இளைஞர்களின் வாழ்கை பாதிக்க படுகிறது என்று தெரியுமா ? என் உடன் பிறந்த சகோதரனின் நிலைமையே அதற்க்கு சான்று. 30 வயதை எட்டியும், திருமணம் ஆகாமல் அவன் தவிர்ப்பதற்கு காரணம் மெகா சீரியல்களே. அவனுக்காக பெண் பார்க்க போகும் இடங்களில், என் தாயின் எதிர்பார்ப்புகள் எப்படி இருக்கிறது தெரியுமா ? அதை கேட்டால் அதிர்ந்தே போவீர்கள். பெண் பார்பதற்கு அழகில் "கோலங்கள்" தேவயானி போலவும், தைரியத்தில் "அண்ணாமலை" ராதிகா போலவும், பணிவிலும் பண்பிலும் "சக்தி" பானுப்ப்ரியா போலவும், உடல் வாகில் "அகல்யா" வில் வரும் குஷ்பூ போலவும் இருக்க வேண்டும் என்று எதிர் பார்த்தல், இந்த ஜென்மத்தில் என் சகோதிரனுக்கு திருமணம் நடக்கும் வாய்ப்பு மிகக்குறைவே.

மெகா சீரியல்களில் வரும் பெண்களுக்கும், நம் வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் ஒரே வித்யாசம் தான், சீரியல் பெண்கள் அழுது அழுது பணம் சம்பாதிக்கிறார்கள், நம் வீட்டு பெண்கள் அழுது அழுது பணம் செலவழிக்கிறார்கள் (மின்சார கட்டணம்). புரிந்தும் புரியாமலும், அறிந்தும் அறியாமலும் உள்ள வயதில் இருக்கும் ஒரு குழந்தை, பள்ளிக்கூடம் விட்டு வீடு திரும்பி வருகையில், தன் வீட்டில் முகம் மூடி அழுது கொண்டிருந்த தன் அம்மாவிடம் கூறினான் "அம்மா, அப்பா செத்துட்டார் நீ அழுவாத மா, கடைசி வரைக்கும் நா உன்ன காப்பாத்தறேன்" என்று, அவனை பொருத்த மட்டிலும், வீட்டில் எழவு விழுந்தால் மட்டும் தான் அழுவார்கள் என்று எண்ணியிருந்தான், பாவம், அவனை சொல்லியும் குற்றம் இல்லை.

மெகா சீரியல்கள் என்றாலே அது சமூகத்துக்கு விரோதமான ஒரு பொழுதுபோக்கு என்பது போல பேசுகிறாயே நீ, என்று சீரும் தாய்மார்களின் குரல் என் காதில் விழுகிறது, பொறுங்கள், நான் இன்னும் என் உரையை முடிக்கவில்லையே. மெகா சீரியல்களால் சில நன்மைகளும் உண்டு.

இப்படித்தான், சென்ற வாரம் எங்கள் வீட்டிற்கு திருட வந்த திருடன், அனைத்து பொருட்களையும் எடுத்துக்கொண்டு, கடைசியாக TV ஐ, திருடி செல்லலாம் என்று எண்ணி, காத்திருந்து காத்திருந்து தூங்கியே போனான், காரணம் இரவு நெடு நேரம் ஆனா பிறகும் மெகா சீரியல்கள் முடிவதாக இல்லை. இது இப்படியாக இருக்க, இன்னொரு வீட்டிலும் இதே திருடன் கதை தான், ஆனால் முடிவு தான் வேறு, அவன் எங்கள் வீட்டிற்கு வந்த திருடன் போல முட்டாள் அல்ல, அவன் TV ஐ மட்டும் விட்டுவிட்டு மீதம் இருந்த அனைத்து பொருட்களையும் எடுத்து சென்று விட்டான், அது தெரியாமல், சீரியலில் வரும் ஒரு காட்சியில், வீட்டிற்க்குள் ஒளிந்திருக்கும் திருடனை பார்த்து விடுமாறு, இங்கிருந்தே கதாநாயகிக்கு துப்பு கொடுத்து கொண்டிருந்தார்கள் அந்த வீட்டின் அங்கத்தினர்கள்.

இதே நிலைமை தொடருமே ஆனால், வருங்காலங்களில், மெகா சீரியல்களுக்கு நடுவில் விளம்பரங்களுக்கு பதிலாக இவை தான் ஒளிபரப்பாகும் "அண்ணா நகரில் இருக்கும் வசந்தா, அவர்களின் கணவன் மாரடைப்பால் அவதிப்படுவதால், அவரை உடனடியாக ஹாலுக்கு வரும்படி அவர் கணவர் திக்கி திக்கி அழைக்கிறார்". "மயிலாப்பூரில் வசிக்கும் மங்களத்திடம், ரசம் ஊசி விட்டதாக அவர் கணவர் தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறார்". "மாம்பலத்தில் வசிக்கும் விசாலத்திடம், தான் அலுவலகத்திலிருந்து வருவர்தருக்கு தாமதம் ஆகும் என்று அவர் மகன் முகுந்தன் வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறார்". இந்த நிலைமை வரும் அளவிற்கு இந்த தேசம் போகக்கூடாது என்பதே நம் வேண்டுகோள்.

ஆகவே மெகா சீரியல்கள் பார்க்கும் தாய்மார்களே, பெரியோர்களே, சிறியோர்களே, அதை உங்கள் வாழ்வின் ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவே பாவியுங்கள், அது மட்டும் தான் உங்கள் வாழ்கை என்று பாவித்தால், குடும்பம் "மெகா சீரியஸ்" ஆகிவிடும்.

ஒ கே, "கோலங்கள்" தொடரின் விளம்பர இடைவேளை முடிந்து விட்டது என்று நினைக்கிறேன், அந்த தொடர் மிக முக்கியமான ஒரு கட்டத்தில் இருக்கிறது, ஆகவே இத்துடன் என் உரையை முடித்து கொள்கிறேன்.

Comments

Popular posts from this blog

My Songs Collection ...

கல்யாணமோ கல்யாணம் ...

Madras Tamil in IT Industry