வங்கி...

ஊரே உன்னை சப்ப பிகர் என்று தூற்றியபோதும் என் கண்ணுக்கு மட்டும் தேவதையாக தெரிந்தாய் நீ, காதலுக்கு கண்ணில்லை என்ற வசனம் என் காதுகளுக்கு ஏறாமல் போனது அப்பொழுது தான். உனது மஞ்சள் நிற தேகத்தில், உன் பல்லும் மஞ்சளாக இருந்ததை நான் கவனிக்க தவறிவிட்டேன்.

எப்படி மறக்க முடியும் நம் முதல் நாள் சந்திப்பை, என்னை காப்பாற்றுங்கள் என்று அலறிக்கொண்டு நீ ஓடி வருவதை பார்த்து பதறிப்போனேன் நான், உன்னை நான்கு முரடர்கள் துரத்திக்கொண்டு வருகிறார்கள் என்று கதறினாய், என்னுள் இருந்த ரஜினிகாந்த்தும், கமலஹாஸநும் பொங்கி எழுந்தார்கள், உன்னை அருகில் இருந்த என் நண்பனின் வீட்டினுள் இருக்கசெய்துவிட்டு, துரத்தி வந்த முரடர்களை துவம்சம் செய்ய தயாரானேன், பிறகு தான் தெரியவந்தது நீ வயறு முட்ட பிரியாணி கட்டிவிட்டு, காசு குடுக்காமல் தப்பித்து வந்தாய் என்று, வாங்கிய பொருளுக்கு காசு கேட்டால் "முரடர்கள்" என்ற வினோத அர்த்தத்தை அன்று தான் முதன்முதலில் அறிந்து அதிர்ந்தேன்.

விதி யாரை விட்டது, அந்த சம்பவத்திற்கு பின், உன்னுள் இருந்த குழந்தை தனம் தான் என்னை மிகவும் கவர்ந்தது என்று எனக்கு நானே குழி தொண்டிகொள்ள ஆரம்பித்த நாள் அன்று தான். மீண்டும் இதே போல் பல பின்தொடர்தல் சம்பவங்களில் நீ என்னையே நாடி வந்ததும், நானும் உனக்காக என் செலவில் "முரடர்களுக்கு" காசு கொடுப்பதும் வழக்கமாகி போயின. என் நண்பர்கள் எனக்கு எப்பொழுதும் சிரித்த முகம் என்று கூறுவார்கள், அது உன் கண்ணிற்கு மட்டும் "இளிச்சவாயன்" என்று தோன்றியதை நான் அப்போது உணரவில்லை.

பின்னொரு மாலை வேளையில் மீண்டும் நீ தூரத்திலிருந்து ஓடிவருவதை கண்டு, கையில் என் பர்சுடன் தயாராக இருந்தேன், ஆனால் இந்த முறை "முரடர்கள்" யாரும் உன்னை துரத்தவில்லை, எங்கு திரிந்திவிட்டாயோ என்ற ஆச்சர்யத்தில் உன்னை பார்த்தேன், "ஹே, இங்க பக்கத்துல இருக்கற ஜுவெல்லரி கடைக்கு வந்தேன் டா, அவசரத்துல பர்ஸ் கொண்டு வர மறந்துட்டேன், நல்ல வேளை உன்ன பார்த்தேன், உன் கிரெடிட் கார்ட் கொஞ்சம் ஸ்வைப் பண்ணறியா, நா உனக்கு நாளைக்கு தரேன்" என்று கூறி என் அடிவயிற்றில் இருந்த புளியை முழுவதுமாக கரைத்தாய். ஜுவெல்லரி கடைக்கு பணம் கொண்டு போகாமல் இருந்த முதல் பெண் நீயாகத்தான் இருப்பாய். அப்பொழுதும் உன் வெகுளித்தனம் தான் என்னை கவர்ந்தது.

உனக்கு என்னிடம் இருந்த காதலின் உரிமையில் தான் நீ என்னை கேட்கிறாய் என்ற எண்ணமே என்னுள் குதூகலத்தை ஏற்படுத்தியது. அந்த குதுகலம் ஓர் மதிய வேளையில் உன்னுடன் வேலை பார்க்கும் உன் தோழி, நீ அவளுக்கு அறநூறு ரூபாய் கடன் என்று சொல்லி, அதை என்னிடமிருந்து வாங்கிப்போனபோது சுக்குநூறாக உடைந்தது. இப்பொழுதும் நான் உன் மீது கோபம் கொள்ளவில்லை, என் வருங்கால வாழ்க்கை துணைக்கு நான் செய்யாமல் வேறு யார் செய்வார்கள் என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன்.

அலைபெசியே வாங்கக்கூடாது என்ற வைராகியத்துடன் வாழ்ந்து வந்த என்னை, துன்புறுத்தி அலைபேசி வாங்க வைத்தாய், சரி, நீ என்னுடன் அடிக்கடி பேச துடிப்பதாக எண்ணி, உன் ஏக்கத்தை போக்குவதற்காக, மிக விலை உயர்ந்த அலைபேசியை வாங்கினேன், மறுநாளே உன் அலைபேசி தொலைந்து விட்டதாக கூறி, அதை என்னிடம் இருந்து வாங்கி சென்றாய், அந்த அலைபேசிக்கு மாத தவணை இன்றும் நான் கட்டிக்கொண்டுதான் இருக்கிறேன். அலைபேசி வாங்கிக்கொடுத்தா போதுமா ? ரிசார்ஜு கார்டு யாரு வாங்கி தருவா ? என்று அப்பாவியாக நீகேட்ட போது, என் மேல் நீ எந்த அளவிற்கு உரிமை வைத்திருந்தால் இப்படி கேட்பாய் என்று பெருமிதம் கொண்டான் இந்த "இளிச்சவாயன்".

வெகு சில நாட்களில், உன் தங்கையை எனக்கு அறிமுக படுத்தினாய், என் வருங்கால மச்சினிச்சியை வெறும் கையுடனா பார்க்க வருவது என்று யோசித்து, ஓர் அழகான கை கடிகாரமொன்றை பரிசாக அளித்தேன் அவளுக்கு, தானம் குடுத்த மாட்டை பல் பிடுங்கி பார்க்ககூடாது என்று கூறுவார்கள், உன் தங்கையோ, தன்னிடம் நிறைய கைகடிகாரங்கள் உள்ளதாகவும், ஆகவே இதற்க்கு பதில் பணமாக தந்துவிடும் படி கூறினாள், அவள் விளையாட்டாக தான் கூறுகிறாள் என்று எண்ணிருந்த வேளையில், "ஹே பக்கத்துல தானே ATM இருக்கு, வா போய் எடுத்துகிட்டு வந்துடலாம், இல்லாட்டி அவ கோச்சுப்பா" என்று நீ கூறியபோது தலை லேசாக கிறுகிறுத்தது. ஒரு குடும்பமே என்னை ஓர் நடமாடும் வங்கியாக தான் பார்த்து வந்திருகிறீர்கள் என்று புரிந்து கொண்டேன்.

சரி, இனியும் தாமதிக்கலாகாது என்று எண்ணி, உன்னிடம் மனம் திறந்து என் காதலை உன்னிடம் கூறியபொழுது, நீ மௌனமாய் இருந்தது சம்மதத்திற்கு அறிகுறி என்று எண்ணினேன், ஆனால் நீ எங்கு நான் உனக்கு கொடுத்த பொருட்களை எல்லாம் திரும்ப பெற்று விடுவேனோ என்ற அச்சத்தில் தான் மௌனமாக இருந்தாய் என்பது, எனக்கு அப்பொழுது புரியவில்லை. அன்று முதல் இன்று வரை நீ என் கண்ணில் படாமல் இருப்பது என்மீதுள்ள வெட்கத்தினால் என்று இன்று வரை நம்பி இருந்தேன், ஆனால் இபொழுது தான் தகவல் கிடைத்தது, உனக்கு வேறு ஒரு வங்கியுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது என்று.

இந்த கடிதத்தை நான் ஏன் உனக்கு அனுப்பாமல் உன் வருங்கால "வங்கிக்கு" அனுப்பினேன் என்றால், அந்த வங்கி வேறு யாருமல்ல, என் உடன் பிறந்த அண்ணன் தான் அவன், நீ மீண்டும் அதே வங்கியில் அக்கௌன்ட் ஓபன் செய்வதை என்னால் பார்த்துக்கொண்டு இருக்க இயலவில்லை, ஆகவே நீ வேறொரு வங்கியை தொடர்பு கொள்ளுமாறு தாழ்மையுடன் வேண்டிகொள்கிறேன்.

இப்படிக்கு உன் முன்னாள் வங்கி

பின் குறிப்பு - டேய் அண்ணா, அப்பா சட்டைப்பையிலிருந்து ஐநூறு ரூபாய் காணவில்லை என்று இங்கு வீடே பதற்றமாக உள்ளது, தயவு செய்து அதை செலவு செய்யாமல் வீடு வந்து சேரவும்

Comments

  1. Awesome blog mate.....I just can't stop laughin....

    ReplyDelete
  2. Good one!! As usual spelling mistakes irukku :)

    ReplyDelete
  3. Ha ha ha ha ha...hilarious! Kalakkite dude!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

My Songs Collection ...

கல்யாணமோ கல்யாணம் ...

Kadalai Podaradhu Eppadi ??