பயணம்

அந்த எதிர்க்காற்றின் குளிர்ச்சியை தாங்க முடியாமல் ஜன்னலை மூடிவிட்டு அம்மா கொடுத்து அனுப்பிய மப்ளரை தலையில் சுற்றிக்கொண்டான் ரமேஷ், அவனின் அன்றாட வாழ்க்கையின் சராசரி பயணம் அது. தேனீ தான் அவனது சொந்த ஊர், அம்மா தேனியில் தனி வீட்டில் இருக்கிறாள், வாழ்கை இழுத்த இழுப்பில் மிகவும் நடுங்கியும், ஒடுங்கியும் போனவள், கணவனின் மறைவுக்கு பின் நான்கு சுவருக்குள் அடைந்து கொண்டவள். அவன் கண் முன்னே அவனது தந்தை வெட்டி கொல்லப்பட்டது இன்னும் அவன் மனத்திரையில் பசுமையாக ஓடிக்கொண்டே இருக்கிறது.

இவனது பால்ய பருவம் சினிமாவில் வருவது போலவே மிகவும் செழிப்பானது, கண்ணுக்கு எட்டிய தூரம் வரை இவனது தந்தையின் இடம் தான் அந்த ஊரில், அவனது கிராமத்தில் கணிப்பொறி வாங்கிய முதல் ஆளும் அவனே, பணத்திற்கு என்றும் குறைவு இருந்ததே இல்லை, அவனின் தந்தை செய்யும் தொழில் என்னவென்று அவனுக்கு ஒருநாளும் புரிந்ததில்லை, அந்த வயதில் அவன் புரிந்து கொள்ளவும் ஆசை படவில்லை. மனிதன் நாளையை பற்றி கவலை படாத ஒரே பருவம் அவனின் குழந்தை பருவம் தானே. அவனின் வீடு எப்பொழுதும் மக்கள் கூட்டம் திளைக்கும் ஒரு இடமாகவே இருந்தது, அனைவருக்கும் விருந்தோம்பல் செய்வதே அவன் தாயின் தலையாய கடமையாக இருந்தது.

கந்து வட்டி என்ற பெயரை அவன் தந்தையின் கொலை வழக்கின் போது தான் அவன் முதன் முதலில் கேள்விப்பட்டான், அது என்னவென்று அவனுக்கு அப்போதும் புரியவில்லை, வழக்கில் போதுமான ஆதாரம் இல்லாததால் அவன் தந்தையை சிதைத்த குற்றவாளிகள் எளிதாக வெளியே வந்து விட்டார்கள். அந்த இரவின் கொடூரம் அவனை இன்றும் தூக்கம் கொள்ளாமல் தவிக்க வைத்து கொண்டு தான் இருக்கிறது. அவன் மேல் அவனது தந்தை வைத்திருந்த பாசத்தை சொல்லி மாளாது, மகனுக்கு என்னென்ன வேண்டும் என்று குறிப்பறிந்து செய்து கொடுக்கும் ஓர் நல்ல தந்தை, உலகத்தில் எதை வேண்டுமானாலும் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பார் தன் மகனுக்காக.

அன்று அவனின் தாய் அவளது தாய் வீட்டிற்க்கு சென்ற சமயம், இரவு மணி 10 இருக்கும், அவனுக்கு கதை சொல்லி உணவு ஊட்டிவிட்டு இவனை உறங்க வைக்க பாடிக்கொண்டிருந்தார் இவன் அப்பா, அப்பொழுது வீட்டின் வாசலில் பலமாக இடிக்கும் சத்தம், ஏதோ நடக்க போவதை முன்னரே அறிந்தது போல், இவனை மார்போடு வாரி அணைத்து அரிசி குதிருக்கு பின்னால் இவனை கடத்தினார், கூரையில் சொருகி இருந்த வீச்சறுவாளை பற்களுக்கு இடையில் சொருகிக்கொண்டு தனது வேட்டியை மேலிழுத்து கட்டிக்கொண்டார், "யாருடா அங்க" என்று உரக்க குரல் கொடுத்து வாசற்கதவை நெருங்கியவரின் பின் கழுத்தில் விழுந்தது ஒரு வெட்டு, ஜன்னல் வழியாக பாய்ந்த அரிவாளை அவர் பார்க்கவில்லை 

அடுத்த 10 நிமிடங்களுக்கு அங்க நடந்தது மனித மிருகங்கள் அவன் தந்தையை கூறு போட்டு கிழித்த ரத்த காட்சி, இனியும் மறைந்திருப்பது தவறு என்று எண்ணி, அரிசி குதிருக்கு பின்னால் இருந்து இவன் ஓடி வர, ரத்த கரை படிந்த அவன் தந்தையின் கைகள் அவனை வராதே என்று ஆட்டியது, அதை துளியும் பார்க்காமல் வெட்டு பட்ட அவன் தந்தையின் சிதைந்த உடலை பார்த்து கூக்குரலிட்டு அழுதான், வெட்டிய கும்பலில் ஒருவன் ரமேஷின் கழுத்தில் அரிவாளை வைத்த போது, உள்ளிருக்கும் உயிரின் மிச்சத்தை எல்லாம் தேக்கி வந்து அவன் கால் பிடித்து மன்றாடினார் அவன் தந்தை, அவனை விடச்சொல்லி. அவரின் கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக மங்கி பார்வையும் உயிரும் பிரியும் தருணத்தில் அவர் அந்த அரிவாள் ரமேஷின் கழுத்தை விட்டு விலகியது மட்டும் தெரிந்தது.

திடீரென்று ரமேஷின் தோளை அடித்து எழுப்பினார் ஒரு போலீஸ் அதிகாரி, "டேய் ஊமையா, எறங்கு, கோர்ட் வந்தாச்சு, வந்து கையெழுத்து போட்டுட்டு போ", கோர்ட்டுக்கு தான் அவன் தந்தையை கொன்றவர்களுக்கு எதிராக ஆதாரம் இல்லை, வாய் பேசாத இவனது வாக்குமூலத்தை ஏற்காத நீதிமன்றம், இப்பொழுது வாய் பேசாத ஒருவன் செய்த கொலையை மட்டும் விசாரிக்க தயாராகிறது, 20 வருடங்களாக இவன் மனத்திரையில் ஓடிய படத்திற்கு இவனே கிளைமாக்ஸ் எழுதி முடித்துவிட்டான்.

Comments

Post a Comment

Popular posts from this blog

My Songs Collection ...

கல்யாணமோ கல்யாணம் ...

Kadalai Podaradhu Eppadi ??