காலத்தை வென்ற கலைஞன் - டி.எம்.எஸ்






தமிழகம் மறந்த இந்த சௌராஷ்டிரா மண்ணின் மைந்தனுக்கு இந்த பதிவு சமர்ப்பணம். 

எழுபதுழலில் பிறந்ததற்கு இன்றும் பெருமை படும் மனிதர்களில் நானும் ஒருவன். எங்களின் பால்ய காலம் தான் எத்தனை மகிழ்ச்சியானது, தெருக்களில் கண்ணாமூச்சி விளையாடுவது, கோலி, பம்பரம், கில்லி, பாண்டி, பல்லாங்குழி, பரமபதம், எத்தனை எத்தனை அற்புத ஆட்டங்கள், இவற்றில் ஒன்று கூட இந்த காலத்து குழந்தைகள் கேட்டிருக்கக்கூட மாட்டார்கள், இவை போலவே எங்கள் இள வயதில் எங்களை தங்கள் திறமையாலும், ஆற்றலாலும், வியக்கவைத்தவர்கள்  பலர் -  கிரிக்கெட்டில் சுவிங்கம் சுவைத்து, எதிரணியை துவைத்த ரிச்சர்ட்ஸ், அரசியலில் - பெண் சிங்கமாய் வாழந்த இந்திரா காந்தி, நடிகர்களில் - காலம் அழிக்க முடியாத எம்.ஜி.ஆர் - சிவாஜி, அதே வரிசையில் இசைக்கு இலக்கணம் கொடுத்த எங்கள் - எம்.எஸ்.வீ மற்றும் டி.எம்.எஸ்

வானொலி மட்டுமே நமக்கும் வெளி உலகத்திற்கும் இருந்த ஒரே பாலம், அதில் தான் எத்தனை இன்பம், வண்ணச்சுடர், ஒளியும் ஒலியும், செய்திகள், இவற்றை கேட்கவே கிறங்கி கிடந்த நாட்கள் தான் எத்தனை எத்தனை, இன்று கை பேசியில் என்னதான் நீங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டாலும், அன்று வானொலியில் கேட்க்கும் சுகம் கிடைக்கவில்லையே, காலத்தின் மாற்றத்தை நான் எதிர்ப்பவன் அல்ல, பழைய கால சுகங்களில் சிலிர்பவன் நான். இன்று கை பேசியில் எம்.பீ.3 பாட்டுக்களை காதொலி மூலம் கேட்பதைவிட, அன்று வானொலியில் கேட்டதை தான் மனம் இன்றும் ரசிக்கிறது.

டி.எம்.எஸ். - துகுலுவ  மீனாட்சி ஐயங்கார் சௌந்தரராஜன், மதுரையில் பிறந்து தமிழகத்தை தன் கணீர் குரலால் வசியம் செய்தவர். இன்றைய தலைமுறைக்கு கிடைத்த அடையாளமும், அங்கீகாரமும், இவருக்கு கிடைத்திருந்தால், இவரும் பல கோடிகளில் புரண்டிருக்கலாம், ஆனால், கலை மேல் இருந்த ஆர்வமும், தன் குரல் மேல் இருந்த நம்பிக்கையும் தான் இவரை இன்றும் நம் உள்ளங்களில் வாழ வைத்திருக்கிறது. இன்று பாடும் பல பாடகர்கள் யார் என்று கூட தெரியாத நமக்கு, அன்றும் அதே குழப்பம் தான், ஏனெனில், டி.எம்.எஸ் அவர்கள் எம்.ஜி.ஆர் க்கு பாடினால், எம்.ஜி.ஆர் பாடுவது போலவே இருக்கும், சிவாஜி அவர்களுக்கு பாடினால் சிவாஜி பாடுவது போலவே இருக்கும். ஒரு பாடகன் அவன் குரலை எப்படிஎல்லாம் மாற்றி பாடமுடியும் என்பதை அவரிடம் இருந்து தான் கற்றுக்கொள்ள வேண்டும்.

பாச மலர் படத்தில் அவர் பாடிய - "மலர்ந்தும் மலராத பாதி மலர் போல" பாட்டை இன்று கேட்டாலும் கண்களில் நீர் முட்டும், ஒரு பாடகனால், தன் குரலில் கூட அந்த "எமொஷனை" கொண்டு வர முடியுமா என்று என்னை பிரம்மிக்க வைத்த பாடல் அது, குறிப்பாக அந்த "அத்தை மகளை மனம் கொண்டு, இளமை வழி கண்டு ...." என்ற இடத்தில் அவர் குரல் குழைந்த விதம், வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத ஒரு அனுபவம்.

அவளுக்கென்ன அழகிய முகம் அவனுக்கென்ன - இந்த பாடல் படப்பிடிப்பும், ஒலிப்பதிவும் ஒரே சமயத்தில் எடுத்தார்களாம், அதில் தான் எத்தனை மெடுக்கு அந்த குரலில், எந்த வகையான மெட்டாக இருந்தாலும் அவரின் குரல் அதற்கு பொருந்தும், அல்லது அவர் அப்படி பொருந்தும் படி பாடி முடிப்பார்.

வந்தா நாள் முதல் இந்த நாள் வரை - இந்த பாடலே ஒரு அருமையான மெட்டு, அதற்க்கு மெருகேற்றியது அண்ணன் டி.எம்.எஸ் அவர்களின் குரல், என் சிறிய வயதில் நான் அதை சிவாஜி தான் பாடினார் என்று கண்மூடி தனமாக நம்பிய காலம் உண்டு, எந்த வித விஞ்ஞான முன்னேற்றங்கள் இல்லாத அந்த காலத்தில் இப்படி பிசுறு தட்டாத குரலில் பாடியது நாம் அனைவரும் மண்டியிட்டு ஒப்புக்கொள்ளவேண்டிய உண்மை. இந்த காலத்து ரெகார்டிங் ஸ்டுடியோக்களில் நான் போய் பாடினாலும் அதை திரும்ப கேட்டால் நன்றாகத்தான் இருக்கும், தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அது.

என் இளமை காலத்தை சுகமாகவும், ரம்யமாகவும் வருடிய பாடகர்களில் டி.எம்.எஸ் ஐயா அவர்களுக்கு என்றுமே முதல் இடம். இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தொடரும் ஐயா உங்களின் பாடல்கள், என்னை போன்ற பித்தர்கள் இருக்கும் வரை, உங்கள் இசை எங்கும் ஒலித்துக்கொண்டே இருக்கும், என் பிள்ளைகளுக்கு கண்டிப்பாக உங்களின் பாடல்களை போட்டுக்காட்டாமல் இருக்க மாட்டேன், அவர்களுக்கும் தெரியட்டும் டி.எம்.எஸ் என்ற ஒரு சகாப்தம் இருந்ததாக.

மயிலாப்பூரில் உள்ள என் இல்லத்திலிருந்து சில தெருக்கள் தள்ளி அமைந்த உங்கள் வீட்டை ஒரு முறை நான் கடக்க நேர்ந்த பொழுது, தாங்கள் ஒரு ஜன்னலின் கம்பிகளுக்கு நடுவே உங்கள் முகத்தை சாய்த்து நின்டிருந்தீர்கள், அந்த கண்களில் தான் ஒரு மென் சோகம், வெறித்து காணப்பட்டது அந்த பார்வை, நான் வெளியிலிருந்து "ஐயா, நான் உங்கள் ரசிகன், உள்ளே வரலாமா" என்று கேட்ட பொழுது, புன்னகையுடன் தாங்கள் என்னை வரவேற்றதும், நாம் உரையாடிய அந்த 10 நிமிடங்கள், என் மனதில் இன்றும் ஈரமான நினைவுகளாக பதிந்துள்ளது.

நீங்கள் பாடியது தான் வாழ்வின் மொத்த அர்த்தம் - வீடு வரை உறவு ... வீதி வரை மனைவி ... காடு வரை பிள்ளை ... கடைசி வரை யாரோ ... கடைசி வரை இருக்க போவது உங்களின் பாடல்களும் உங்களின் நினைவும் தான். அண்ணாரின் ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்.

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும்  - தெரிந்து தான் பாடிவைத்தாய் போலும்

Comments

Popular posts from this blog

My Songs Collection ...

கல்யாணமோ கல்யாணம் ...

SPB 1000 - Finally